கேரளா வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று எம்.பி யாக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதன் மூலம் காங்கிரசின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்த அவர், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
காங்கிரசின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியைத் தக்கவைப்பதற்காக, ராகுல் காந்தியின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அக்கட்சி களமிறக்கியது. இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன் காரணமாக இன்று அவர் வயநாடு தொகுதி எம்பியாக பதிவியேற்றார். பிரியங்கா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று மக்களவைக்கு சென்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இதனை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.