காந்தியின் கடிதங்கள், பொருட்கள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்

செய்திகள்

மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளன.காந்தியின் நெருங்கிய நண்பரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோரானிக்கு, காந்தி உண்மை, அகிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து 688 கடிதங்களை கைப்பட எழுதியுள்ளார்.ஆனந்த் டி. ஹிங்கோரானியின் மனைவி வித்யா மறைந்த பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி தினமும் எழுதிய இந்தக் கடிதங்கள் ‘இன்றைய சிந்தனை’ என்ற பெயரில் புத்தகமாக தொகுக்கப்பட்டன. காந்தியின் சிந்தனைகள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிந்துகொள்ள உதவும் முக்கியமான ஆவணங்களாக இந்தக் கடிதங்கள் கருதப்படுகின்றன.சாஃப்ரன் ஆர்ட் நிறுவனம் நடத்திய ‘காந்தி: ஆனந்த் டி. ஹிங்கோரானியின் தொகுப்பிலிருந்து’ என்ற ஏலத்தில், இந்தக் கடிதங்கள் அடங்கிய 86 தொகுப்புகள் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகின. இந்திய வரலாற்று ஆவணம் ஒன்று ஏலத்தில் பெற்ற அதிகபட்ச தொகையாக இது சாதனை படைத்துள்ளது.மேலும், கடவுள் மற்றும் பகவத் கீதை குறித்த காந்தியின் சிந்தனைகள் அடங்கிய ‘கடவுள் பற்றிய செய்தி’ என்ற கடிதத் தொகுப்பு ரூ.1.68 கோடிக்கு விற்பனையானது.காந்தி பயன்படுத்திய ‘பெட்டி சர்க்கா’ எனப்படும் பெட்டி வடிவ ராட்டையும், ராட்டைச் சுழற்றுவதன் ஆன்மிக ஒழுக்கம் குறித்து அவர் எழுதிய இரண்டு கடிதங்களும் அடங்கிய தொகுப்பு ரூ.1.02 கோடிக்கு விற்பனையானது.காந்தி கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் கையெழுத்துடன் கூடிய புகைப்படம் ரூ.78 லட்சத்திற்கும், பொருளாதார சுதந்திரம் தொடர்பான அவரது கடிதங்கள், தந்திகள் மற்றும் அஞ்சல் அட்டைகள் ரூ.57.60 லட்சத்திற்கும் விற்பனையாகின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *