சவுதி அரேபியா கடற்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது கீழமோகரை கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் உயிரிழந்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம் கொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன், கீழமோகரை கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியா சென்றிருந்தனர்.கடந்த 10ஆம் தேதி அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றபோது, அவர்கள் மீது ஈரானிய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 மீனவர்கள் காயமடைந்து சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், கீழமோகரை பகுதியைச் சேர்ந்த சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் மீனவ கிராமங்களில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.மேலும், மாவீரன் உயிரிழந்து 10 நாட்கள் கடந்தும் அவரது உடல் இன்னும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவில்லை. ஏற்கனவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக குடும்பத்தினரும், கிராம மக்களும் காத்திருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு மீனவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

