கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இன்று மீண்டும் தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சோக சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.சம்பவத்திற்குப் பிறகு விஜய் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காமல் சென்னை சென்றது விமர்சனங்களை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு மாதம் கழித்து பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறியதும் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது.ஆரம்பத்தில் இந்த வழக்கை தமிழக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. மேலும், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது.சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, உள்ளூர் மக்கள், போலீசார், வியாபாரிகள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பலரிடம் விசாரணை நடத்தினர். அத்துடன், தற்போதைய அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது.இதற்கிடையில், தற்போதைய முதல்வரும் தவெக தலைவருமான விஜய்க்கும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் ஜனவரி மாதத்தில் பல நாட்கள் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதேபோல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.மார்ச் மாதத்திற்கு பிறகு இந்த வழக்கில் விசாரணை அமைதியாக இருந்த நிலையில், இன்று காலை டிஎஸ்பி பிரவீன்குமார் தலைமையிலான 10 பேர் கொண்ட சிபிஐ குழு கரூருக்கு வந்து மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. வாங்கல் மற்றும் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

