மாநிலங்களவையில் நேற்று ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத் (திருத்த) மசோதா 2026’ நிறைவேறியது. இம்மசோதாவானது வந்தே மாதரம் மசோதா என்றும் அழைக்கப்படுகிறது.
மசோதாவானது ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971’-இன் வரம்பிற்குள் வந்தே மாதரம் பாடலையும் கொண்டுவருகிறது. இச்சட்டத்தின் படி அரசியலமைப்புச் சட்டம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் உள்ளிட்ட தேசியச் சின்னங்களை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த திருத்தம் நடைமுறையானால், ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது, அதற்கு இடையூறு விளைவிப்பது ஆகியவைகளுக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.
இந்த நிலையில் இன்று மக்களவையிலும் ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத் (திருத்த) மசோதா, 2026’ நிறைவேறியுள்ளது. முன்னதாக மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘வந்தே மாதரம்’ பாடல் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவால் 1875-ல் எழுதப்பட்டு, 1882-ல் அவரது ‘ஆனந்தமடம்’ (Anandmath) நாவலில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இப்பாடலின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் மத்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, அரசு விழாக்களில் இப்பாடலைப் பாடுவது குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

