இந்தியாவின் எஸ்ஸார் குழுமம் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மிகப்பெரிய எஃகு ஆலையை அமைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எஸ்ஸார் குழுமம், இரும்பு, கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் செய்து வருகிறது. பிரிட்டன், சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இக்குழுமத்தின் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்காவின் நஷ்வாக் நகரில் எஸ்ஸார் குழுமத்தின் சார்பில் மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சுமார் 16,000 ஏக்கர் பரப்பளவில் இரும்புத் தாது சுரங்கத்தை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அயோவா மாகாணத்தின் லீ பகுதியில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் புதிய எஃகு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ரவி ரூயா மற்றும் அவரது மகன் ரேவந்த் ரூயா ஆகியோர் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய ட்ரம்ப், கடந்த ஆண்டு எஃகு பொருட்கள் இறக்குமதிக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டதாகவும், இதனால் பல நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே நேரடியாக ஆலைகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். எஸ்ஸார் குழுமம் அயோவாவில் மிகப்பெரிய எஃகு ஆலையை அமைப்பதன் மூலம் அமெரிக்காவின் எஃகு உற்பத்தித் துறை மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.

