மதுரை அரசு மைய மருத்துவமனையில் தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று மதியம் 12 மணியளவில் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், முதற்கட்டமாக 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார். தொடர்ந்து சீமாங் மகளிர் பிரசவ கட்டிடத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பிறந்த குழந்தைகளில் 10 பேருக்கும் தங்க மோதிரங்களை வழங்கினார். இதன் மூலம் மொத்தம் 37 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. இதற்காக முதல்வர் விஜய் இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் முதல் மதுரை அரசு மருத்துவமனை வரை சுமார் 15 கி.மீ. தூரம் ரோடு ஷோவில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும் ரூ.10.25 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்திற்குச் சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர் விஜய், மாலை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் மாலை 6.30 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை திரும்புகிறார்.

