தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றன. இதற்காக டெல்லியில் உள்ள அரசியல் சாசன கிளப்பில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில், திட்டமிட்டு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்ற தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதனால் ஞானேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவர் எடுத்த நிர்வாக முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பல்வேறு கட்சிகள் முன்வைத்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 20 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

