மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்ல உள்ளார்.தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மேகதாது அணை விவகாரமும் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், பல மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மறுபுறம், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு – கர்நாடகா இடையே இந்த விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இதற்கிடையே, ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூருவில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பில் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் பங்கேற்க வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்திய நிலையில், சில அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்த சூழ்நிலையில், முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்வது உறுதியாகியுள்ளது. அவருடன் 3 அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள், ஆலோசகர்கள் என மொத்தம் 13 பேர் கொண்ட குழுவும் கர்நாடகா செல்ல உள்ளது.முதல்வர் விஜயுடன் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் செல்கின்றனர். சிறப்பு ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, தலைமைச் செயலாளர் சாய்குமார், முதல்வரின் 2 செயலாளர்கள் மற்றும் அட்வகேட் ஜெனரலும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடைபெற உள்ள இந்த சந்திப்பு, தமிழ்நாடு – கர்நாடகா இடையிலான காவிரி நதிநீர் பிரச்சனையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

