மொஜ்தபா காமேனியின் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: புதிய வீடியோ வெளியீடு

செய்திகள்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரது புதிய காணொளியை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் பொதுவெளியில் அதிகமாக தோன்றாமல், பெரும்பாலும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மூலம் தகவல்களை வெளியிட்டு வந்தார்.இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவின. குறிப்பாக, மொஜ்தபா காமேனியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேலின் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், அவர் உயிரிழக்கக்கூடும் என்ற வதந்திகளும் பரவியதால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில், ஈரான் அரசின் இஸ்லாமிய வளர்ச்சி அமைப்பின் கீழ் செயல்படும் ‘மெஹர்’ செய்தி நிறுவனம், மொஜ்தபா காமேனி நலமாக இருப்பது போன்ற புதிய காணொளி காட்சிகளை வெளியிட்டுள்ளது.அந்த காணொளியில், அவர் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காணொளியில் தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவரது உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மொஜ்தபா காமேனியின் உடல்நிலை குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு ஈரான் அரசு ஊடகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

. vz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *