இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைப்புகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளம் எனும் தலைப்பில் கீழடிக்கு விருது வழங்கப்பட்டது.
சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள், தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.
சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.
இவ்வளவு பெருமைக்குரிய கீழடி இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக தேர்வாகியிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான தருணம்.