இந்தியாவில் வசிக்கும் குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட், விசா விதிகளில் தளர்வு!இந்தியாவில் வசித்து வரும் குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கான பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவண விதிகளில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள Immigration and Foreigners (Exemption) (Amendment) Order, 2026 என்ற புதிய உத்தரவின்படி, சில பாகிஸ்தான் நாட்டினர், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையினர், குறிப்பிட்ட இலங்கைத் தமிழர்கள் மற்றும் திபெத்தியர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.குறிப்பாக, இந்து, சீக்கியர், புத்த மதத்தினர், சமணர், பார்சி மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள், மதத் துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்து, 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நாட்டிற்குள் நுழைந்திருந்தால், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவண விதிகளில் இருந்து விலக்கு பெறலாம்.மேலும், 2015 ஜனவரி 9ஆம் தேதிக்குள் இந்தியாவில் தஞ்சமடைந்து பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் இந்த அறிவிப்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.2009 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு வந்து நிரந்தரமாக வசிக்க விரும்பிய சில பாகிஸ்தான் நாட்டினருக்கும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் புதுப்பித்தல் தொடர்பான விலக்கு வழங்கப்பட்டுள்ளது.இதுதவிர, இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடியாகப் பயணம் செய்யும் குடிமக்களுக்கான அடையாள ஆவண நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியர்கள் நேபாளம் அல்லது பூடானுக்குச் செல்லும்போது, விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றைக் காட்டி பயணம் செய்யலாம்.இந்தத் தளர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை அல்ல. அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கு உரிய விசா அனுமதி தேவைப்படும் பிரிவினருக்கு அந்த நடைமுறை தொடர்ந்து பொருந்தும்.இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியாமல் சிரமப்படும் வெளிநாட்டினரின் பிரச்சினைகளைக் குறைப்பதும், அண்டை நாடுகளுக்கிடையிலான பயண நடைமுறைகளை எளிதாக்குவதுமாகும்.
