இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பானன் இந்து கோவில் கோவிலுக்கு இன்று சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்காக கட்டப்பட்டுள்ள இந்த உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டதுடன், அதன் தொன்மை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் புதிய புனரமைப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்திய அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன், இந்தோனேசியாவின் முக்கிய பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான இந்த கோவிலை பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், கோவில் வளாகத்தின் அழகிய தோற்றத்தை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாக கண்டு ரசித்தார்.
இந்த நிகழ்வு, இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான கலாச்சார மற்றும் ஆன்மீக உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
உலக பாரம்பரியச் சின்னமாக விளங்கும் பிரம்பானன் கோவிலின் புனரமைப்பு திட்டம், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பண்டைய இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையை பாதுகாப்பதில் இந்தியா கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆன்மீகப் பயணம் உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

