போயிங் நிறுவனத்தின் பி737 மேக்ஸ் ரக விமானங்களின் மென்பொருளில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் மேலே சென்று வேறு பாதையில் திரும்பும் போது, அதன் தானியங்கி வழிகாட்டுதல் அமைப்பு திடீரென செயல்படுவதை நிறுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானிகள் இந்தச் சிக்கலை பாதுகாப்பாக கையாளுவதற்கான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை போயிங் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், பிரச்சினையை நிரந்தரமாக சரிசெய்ய புதிய மென்பொருள் அப்டேட்டையும் தயாரித்து வருகிறது. இந்தியாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் 53 பி737 மேக்ஸ் விமானங்களும், ஆகாசா ஏர் நிறுவனத்திடம் 43 விமானங்களும் என மொத்தம் 96 பி737 மேக்ஸ் விமானங்கள் உள்ளன. இந்த விவகாரம் குறித்து ஆகாசா ஏர் நிறுவனம், தங்களது விமானங்களின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், விமானங்கள் வழக்கம்போல் பாதுகாப்பாக இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதேபோல், இந்த வார தொடக்கத்தில் ஏர்பஸ் ஏ321 நியோ விமானங்களின் உடற்பகுதி பூச்சில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இந்தியாவில் இண்டிகோ நிறுவனத்தின் சுமார் 12 விமானங்கள் பாதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

