ஹார்முஸ் ஜலசந்தியில் எதிரி நாட்டு ராணுவத்தின் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வகையில், அமெரிக்கா புதிய லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கி சோதனை செய்து வருகிறது. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கப்பல்களை, ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள அமெரிக்கா அதிக செலவு கொண்ட ஏவுகணை தடுப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. இதனால் போர் செலவு அதிகரித்துள்ள நிலையில், குறைந்த செலவில் அதிக திறனுடன் செயல்படும் வகையில் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பில் புதிய லேசர் ஆயுதத் தொழில்நுட்பத்தை அமெரிக்க ராணுவம் உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஜெனரேட்டர்கள் அல்லது பேட்டரிகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி, அதை ஃபோட்டான்களாக மாற்றுகிறது. பின்னர் அந்த ஒளித் துகள்களை ஒரே சக்திவாய்ந்த லேசர் கற்றையாகக் குவித்து, இலக்கின் மேற்பரப்பை அதிக வெப்பமடையச் செய்து ட்ரோனின் சென்சார்களை செயலிழக்கச் செய்யவோ அல்லது ட்ரோனை அழிக்கவோ முடியும். அமெரிக்க ராணுவம் இந்த வகை லேசர் தொழில்நுட்பத்தை மெக்சிகன் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும், மத்திய கிழக்கில் உள்ள சில போர்க்கப்பல்களிலும் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை மனித இலக்குகளுக்கு எதிராக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டைரக்டட் எனர்ஜி கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் நீஸ் கூறுகையில், ட்ரோன்களின் சென்சார்களை செயலிழக்கச் செய்வதற்கும் அல்லது ட்ரோனையே அழிப்பதற்கும் அவற்றை துல்லியமாக கண்காணித்து, தேவையான இடத்தில் துல்லியமாக லேசர் மூலம் தாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த லேசர் அமைப்புகளை இயக்க அமெரிக்க ராணுவ வீரர்கள் மாற்றியமைக்கப்பட்ட எக்ஸ்பாக்ஸ் கேம் கன்ட்ரோலர்களை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

