சமீபத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருந்த நிலையில், இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் விரைவில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு X தளத்தில் ஓர் பதிவை பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பரிசுகளை விஜய் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

