திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு நேற்று நள்ளிரவு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பெயரில் குண்டு வெடிப்பு மிரட்டல் கடிதங்கள் இமெயில் மூலம் வந்தன. இதுபற்றி தனியார் ஹோட்டல் உரிமையாளர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகாரின் பெயரில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது அவை போலி மிரட்டல் என்று தெரிய வந்தன.இதையடுத்து, 4வது நாளாக நேற்று (அக். 27) இரவு திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு இமெயிலில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். உடனடியாக இஸ்கான் கோயில் நிர்வாகத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். மோப்பநாய் மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் உபகரணங்கள் ஆகியவற்றுடன் சென்ற காவல்துறையினர் இஸ்கான் கோயில் வளாகம் முழுவதும் தீவிர தேடுதல் மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டுகள் ஏதும் கிடைக்கவில்லை.
கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வரும் இமெயில் மிரட்டல்கள் காவல்துறையினரை பெரும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன. தினமும் வந்து சேரும் இமெயில் மிரட்டல்கள் அதனை தொடர்ந்து நடத்தப்படும் காவல்துறையின் சோதனை ஆகியவற்றால் ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.