தமிழக முதல்வர் விஜய், நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லி சென்றடைந்த அவர், முதலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்திக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.கூட்டம் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்திலும் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். அதன்பின் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் குழு புகைப்படமும் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.டெல்லி பயணத்தின் போது மத்திய அமைச்சர்களில் சிலரையும் முதல்வர் விஜய் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கடந்த முறை நடைபெறாத மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பு இந்த முறை நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.நாளை மறுதினம் பிற்பகல் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் முதல்வர் விஜய், மாலை சென்னை திரும்ப உள்ளார்.

