மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – இண்டியா கூட்டணி வலியுறுத்தல்.

அரசியல் இந்தியா கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள்

டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடிகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஒமர் அப்துல்லா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரே மற்றும் ஹேமந்த் சோரன் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, மொத்தம் 23 கட்சிகள் கலந்து கொண்டு ஐந்து முக்கிய அம்சங்களில் ஒருமித்த கருத்தை எட்டியதாக தெரிவித்தார்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுப்பிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்ட குழப்பங்களால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய இண்டியா கூட்டணி, இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியது.அதேபோல், நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இனி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடத்தவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், “நாங்கள் தற்போது இண்டியா கூட்டணியில் இல்லை” என்று தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *