தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமைகள், நீதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. நவநீதம் பிள்ளை 1941-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். சட்டத் துறையில் சிறந்து விளங்கிய இவர், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி நிலவிய காலத்தில், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட போராட்டக்காரர்களுக்காக வழக்காடினார். நிறவெறிக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு நீதி கிடைக்கவும் பாடுபட்டார்.
தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் வெள்ளையரல்லாத பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்ற பெருமையும் நவநீதம் பிள்ளைக்கு உண்டு. மேலும், ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.2003 முதல் 2008 வரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிய இவர், 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகப் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து, 2021 முதல் 2025 வரை பாலஸ்தீன மக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டார். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்காக நீண்டகாலமாகப் பாடுபட்ட நவநீதம் பிள்ளையின் வாழ்க்கை பலருக்கும் முன்மாதிரியாக உள்ளது. அவரது பணிகள் உலக அரங்கில் தமிழ் வம்சாவளியினரின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றன.

