கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதிலிருந்து ‘கேரளம்’ என மாற்ற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மலையாளம் பேசும் பகுதிகள் இணைந்து கேரளா மாநிலம் உருவானது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலத்தில் ‘கேரளா’ என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலத்திற்கு, அதன் இயற்பெயரான ‘கேரளம்’ என்ற பெயரை வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘கேரா’ என்பது தென்னை மரம் என்றும் ‘ஆலம்’ என்பது நிலம் என்றும் பொருள்; அதனால் ‘தென்னை மரங்களின் நிலம்’ என்பதைக் குறிக்க ‘கேரளம்’ என்ற பெயர் பயன்படுகிறது. இந்த பெயர் மாற்றத்திற்காக 2023 ஆகஸ்ட் மற்றும் 2024 ஜூன் மாதங்களில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் இந்த மாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதன் பின்னர் அனைத்து அரசு ஆவணங்கள், கடவுச்சீட்டு மற்றும் வரைபடங்களில் ‘கேரளம்’ என்ற பெயரே இடம்பெறும். இந்த தீர்மானம் மாநிலத்தின் அடையாளத்தை பாதுகாக்கும் வெற்றி என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

