தமிழகத்தில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய நேர்மையான அதிகாரிகளில் மிக முக்கியமானவர் சகாயம் ஐஏஎஸ்.
அவர் அரசாங்க பணியில் இருக்கும்போது அவரின் நேர்மைக்காகவே அடிக்கடி இடமாறுதலை சந்தித்தவர்.
பணியில் இருக்கும்போது மதுரையில் உள்ள கல்குவாரி, மணல் கொள்ளை போன்ற பல விஷயங்களில் நேரடியாக தலையிட்டு செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வந்து மிகவும் பிரபலமானவர்.
சில தினங்களுக்கு முன்னால் அவர் அரசியலில் தனது பயணத்தை தொடங்க இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
ஆரோக்கியமான மாற்றத்தையும் , நேர்மையான அரசியலை விரும்பும் பலருக்கும் இது ஒரு அருமையான செய்தியாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் அண்ணா ஹசாரேவா சகாயம்:
அண்ணா ஹசாரே மத்திய அரசாங்கத்தை எதிர்த்தும், லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரியும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பெரிய அரங்கில் உண்ணா நோன்பு இருந்து மிகவும் பிரபலம் ஆனார்.
அவரிடமிருந்து பிரிந்து வந்து தான் ஆம் ஆத்மி என்கிற கட்சியை தொடங்கி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் ஆனார்.
இப்படி நேர்மையான அரசியலுக்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர் ஆக கருதப்படுகிறார் அண்ணா ஹசாரே.
அவரைப் போல தமிழகத்தின் நேர்மையான அரசியலுக்கு குரல் கொடுப்பாரா சகாயம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
நமது நாட்டில் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவரை ஒரு சிறு வட்டத்துக்குள் அடைத்து விடுவார்கள். உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை கூட பலர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
முன்பெல்லாம் அண்ணா ஹசாரே என்றால் நேர்மை என்று மட்டும்தான் கூறிக்கொண்டு இருந்தார்கள் ஆனால் தற்போது அண்ணா ஹசாரே தான் பிஜேபியின் பி டீம் எனவும் , அவரால் தான் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியை இழந்தது என்பது போன்று பேசி வருகிறார்கள்.
திரு.சகாயம் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பிரித்து , திமுகவின் வாக்குகளை சிதறடிக்க பயன்படுத்தப்பட போகிறார் என்றும் பலர் இப்போதே குறை கூற ஆரம்பித்து விட்டார்கள்.
அவரை பாஜாகாவின் விசிரியாகவே பலர் கருதுகிறார்கள். மேலும் சிலர் ஒரு படி மேலே போய் அவரை மதரீதியாக விமர்சித்து வருகிறார்கள்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிய சுப்பிரமணிய பாரதியாரையும் அவருடைய சாதிப்பெயரை சொல்லி தானே இன்றுவரை திட்டி வருகிறார்கள்.!
உண்மையில் மாற்று அரசியல் தமிழகத்தில் எடுப்படுமா ?:
தமிழகத்தைப் பொருத்தவரை காமராஜர் காலத்திற்கு பிறகு இரண்டு திராவிட கழகங்கள் மட்டுமே ஆட்சி பொறுப்பில் இருந்து வருகின்றது.
இந்த மாநிலக் கட்சிகளின் பெரும் வளர்ச்சியினால் மற்ற தேசியக் கட்சிகளுக்கோ அல்லது இதர கட்சிகளுக்கு பெரும்பாலும் வாய்ப்புகளே இல்லை.
ஆனால் முன்னாள் முதலமைச்சர்கள் இருவரும் குறுகிய கால இடைவெளியில் இறந்து போன பிறகு ஒரு மாற்று அரசியலுக்கான தேவை இருப்பதாக தெரிகிறது.
எடப்பாடியார் வலுவான அரசாங்கத்தை அமைக்க முடியாது என்கிற எண்ணம் வலுத்து வந்த நாட்களிலேயே இந்த கோஷங்கள் பெரிதும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்கு வருடங்களில் கடந்து, அவர் அடுத்த தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்.
இருந்தாலும் இரு கட்சிகளின் மேலே மக்களுக்கு என்னவோ ஒரு சலிப்பு இருக்கத்தான் செய்கிறது.
இந்த வெற்றிடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பதை மக்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனேயே அவர் கூறிய வார்த்தை வெற்றிடத்தை நிரப்ப நான் தயார் என்பதுதான்.
ஆனால் உடல்நிலை காரணமாக நான் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று அவர் பின்வாங்கி விட்டார்.
இப்போது திரு சகாயம் அவர்கள் அறிவித்திருப்பது நடுநிலை மக்களுக்கும், நல்ல அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
நமது மக்கள் மனநிலை பற்றி சரியாக புரியாமல் அவர் கட்சி தொடங்கி செயல் பட முடிவு செய்துவிட்டார் ! தேர்தலுக்கு குறுகிய கால இடைவெளியில் அவரது இந்த அறிவிப்பின் மூலம் ஒன்றும் பெரிய மாற்றம் நிகழ்ந்து விடாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
எதற்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
சகாயம் சாதிப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
சா.ரா