இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்? – ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்இந்தியாவில் அதிகரித்து வரும் ரூபாய் நோட்டுகளின் தேவையை சமாளிக்க, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை (பாலிமர் நோட்டுகள்) அறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சமீபத்தில் பாட்னா மற்றும் மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டங்களில் இந்த விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வந்தாலும், காகித பணப்புழக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது இந்தியாவில் சுமார் 42.86 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான காகித நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடவும் பாதுகாப்பாக பராமரிக்கவும் ரிசர்வ் வங்கி மிகப்பெரிய தொகையை செலவழித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ.5101.4 கோடி செலவில் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், 2024-25 நிதியாண்டில் சேதமடைந்த மற்றும் பழுதடைந்த 238 கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 12.3 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அதிக செலவும் பராமரிப்பு சுமையும் காரணமாக, நீண்ட ஆயுள் கொண்ட பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது. காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் சுமார் 2.5 மடங்கு அதிக நாட்கள் பயன்படுத்தக்கூடியவை என்றும், உற்பத்தி செலவும் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.முதற்கட்டமாக அதிகம் பயன்படுத்தப்படும் ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. இந்நோட்டுகள் விரைவாக சேதமடைவதால், பாலிமர் வடிவத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாலிமர் நோட்டுகள் ‘பிளாஸ்டிக் நோட்டுகள்’ என்று அழைக்கப்பட்டாலும், அவை ATM கார்டுகளைப் போல கடினமாக இருக்காது. இவை எடை குறைவானவை, எளிதில் மடிக்கக்கூடியவை மற்றும் சாதாரண காகித நோட்டுகளைப் போலவே பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

