பிரபலமான உணவுப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோ, அதன் பெயரை “Eternal” என மாற்றுவதற்கான நிர்வாக குழுவின் ஒப்புதலை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பிறகு, பங்குதாரர்கள் மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் ஒப்புதலுடன் கூடிய பிற சட்டப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலுக்காக சொமேட்டோ நிறுவனம் காத்திருக்கிறது. சொமாட்டோ நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணமாக, உணவு விநியோக பிராண்ட் மற்றும் செயலியில் இருந்து தனித்துவமாகக் காணப்படுவதற்கான முயற்சியாக இது விளக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சொமாட்டோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், “பிளிங்கிட்டை கையகப்படுத்திய பிறகு, உணவு விநியோக பயன்பாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, சொமாட்டோவிற்கு பதிலாக ‘எடர்னல்’ என்ற புதிய பிராண்ட் பெயரை உள்நாட்டில் பயன்படுத்தலாம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “சொமாட்டோவை கடந்த ஒரு புதிய நோக்கத்தை எதிர்காலத்தில் எடர்னல் என அழைக்க வேண்டும் என நாங்கள் எண்ணினோம். இப்போது, பிளிங்கிட்டுடன் இணைந்து, நாங்கள் அந்த நிலைக்கு வந்துள்ளோம். எனவே, Zomato லிமிடெட் நிறுவனத்தை எடர்னல் லிமிடெட் என மாற்ற விரும்புகிறோம். எடர்னல் நான்கு முக்கிய வணிகங்களை உள்ளடக்கியது, அவை சொமாட்டோ, பிளிங்கிட், டிஸ்ட்ரிக்ட் மற்றும் ஹைபர்பியூர் ஆகும். எங்கள் வாரியம் இன்று இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.” மேலும் எங்கள் பங்குதாரர்களும் இந்த மாற்றத்தை ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அது அங்கீகரிக்கப்பட்டால், எங்கள் நிறுவன வலைத்தளம் zomato.com இலிருந்து eternal.com க்கு மாறும். எங்கள் ஸ்டாக் டிக்கரையும் Zomato இலிருந்து Eternal ஆக மாற்றுவோம். எடர்னல் என்பது ஒரு சக்திவாய்ந்த பெயர். இது வெறும் பெயர் மாற்றம் அல்ல; இது ஒரு குறிக்கோள் அறிக்கை” என பதிவிட்டுள்ளார்.

