இந்திய டி20 கிரிக்கெட் அணி தான் உலகின் சிறந்த அணி; ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம்

ஆஸ்திரேலியா இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதன் மூலம் 2024 மற்றும் 2026 என தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று, கோப்பையை தக்க வைத்த முதல் அணி என்ற மகத்தான சாதனையை இந்தியா படைத்தது. இந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் வலிமையான டி20 அணி இந்தியாதான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மனதார பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தற்போதைய இந்திய டி20 அணியை வரலாற்றின் சிறந்த அணி என கூறுவதை யாராலும் மறுக்க முடியாது. உலகத்தரம் வாய்ந்த பல மேட்ச் வின்னர்கள் இந்த அணியில் உள்ளனர். 2024 மற்றும் 2026 உலகக்கோப்பை தொடர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற இருதரப்பு டி20 தொடர்களில் இந்திய அணி ஒரு டி20 தொடரை கூட இழக்கவில்லை. டி20 கிரிக்கெட் மட்டுமின்றி, கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் செயல்பாடு ஆச்சரியமளிக்கிறது. இந்திய வீரர்களின் இத்தகைய அசைக்க முடியாத ஆதிக்கத்திற்கு ஐபிஎல் தொடர் மிக முக்கிய காரணம். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் வீரர்கள் தொடர்ந்து விளையாடி பெற்ற அனுபவம் மிகப்பெரியது. அதுதான் கோப்பையை தக்கவைப்பதற்கு முக்கிய பங்காற்றி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியும் சர்வதேச போட்டிக்கு இணையான அழுத்தத்தை தரக்கூடியது. அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளை கையாண்ட அனுபவத்துடன் மிகச் சிறந்த சமநிலை கொண்ட அணியாக இந்திய அணி களமிறங்கி தொடர்ந்து சாதித்து வருகிறது’’ என்றார். 2000ம் முதல் 2010 வரை ஆஸ்திரேலிய அணி உலகின் அசைக்க முடியாத ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியாக இருந்த போது, பெரும்பாலான போட்டிகளில் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் தற்போதைய இந்திய டி20 அணியே உலகின் வலிமையான அணி எனக் கூறி இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *