தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. தேர்தலுக்காக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வந்தார். அந்த வகையில் பாமகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், இன்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றார். இந்த சந்திப்புக்குப் பிறகு, இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக–பாஜக கூட்டணி ஏற்கெனவே உறுதியான நிலையில், அதில் பாமக இணைந்துள்ளது என்றும், இது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் விரும்பிய இயற்கையான கூட்டணி என்றும் தெரிவித்தார்.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு வலிமையான மற்றும் மக்கள் நல அரசை வழங்கும் வகையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார். அதிமுக, பாஜக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து இரவு பகல் பாராமல் செயல்பட்டு பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
இதனிடையே, பாமகவுக்கு சுமார் 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி தொடர்பான பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

