திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இதுவரை திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க 48 வேலை நாட்கள் வரை ஆகும் நிலையில், தற்போது அந்த காலம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.அவர் கூறுகையில், 1952 திரைப்படச் சட்டம் மற்றும் 2024 திரைப்பட சான்றிதழ் விதிமுறைகளின் அடிப்படையில் ஒன்றிய திரைப்பட தணிக்கை வாரியம் செயல்பட்டு வருவதாகவும், ஆன்லைன் முறை அமலுக்கு வந்ததன் காரணமாக தணிக்கை செயல்முறை வேகமடைந்துள்ளதாகவும் விளக்கினார். புதிய நடைமுறையின் படி, திரைப்படங்களுக்கு 18 நாட்களுக்குள் மற்றும் குறும்படங்களுக்கு 3 நாட்களுக்குள் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தேவைப்பட்டால் திரைப்படங்களை மறு ஆய்வு குழுவிற்கு அனுப்புவதற்கான கால வரம்பும் விதிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

