இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த ஏவுதளத்தில் இருந்து 2027ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அவர் கூறினார். மேலும், சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தொடர்பாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2040ம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார் என்றும் அவர் நினைவூட்டினார்.அதற்கேற்ப இஸ்ரோ நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையிலான ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆளில்லா ராக்கெட் ஏவுதல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2023 ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்–3 வெற்றிகரமாக நிலவில் இறங்கியதைத் தொடர்ந்து, தற்போது சந்திரயான்–4 மற்றும் சந்திரயான்–5 திட்டப் பணிகள் முன்னேறி வருகின்றன. சந்திரயான்–4, நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்கான திட்டமாகும். இதனைத் தொடர்ந்து, ஜப்பான்–இந்தியா கூட்டு முயற்சியில் சந்திரயான்–5 திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. 6,500 கிலோ எடையுள்ள லேண்டரும், 350 கிலோ எடையுள்ள ரோவரும் கொண்ட இந்த திட்டம் 2028ம் ஆண்டில் ஏவப்பட உள்ளது என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

