ஈரான் போர் நிறுத்தம் ‘நிறைவு’ என ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

செய்திகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் செய்யப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் போது, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரான் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.அவர் கூறுகையில், ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு பின்னர் பொதுவெளியில் அவற்றை மறுப்பதாக குற்றம்சாட்டினார். இதனால், இனிமேல் ஈரானுடன் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.மேலும், அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம் என்றாலும், அது நேரத்தை வீணடிக்கும் முயற்சியாகவே இருக்கும் என ட்ரம்ப் கூறினார். ஈரான் தலைவர்களை அவர் கடுமையாக விமர்சித்ததுடன், அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் மையங்கள் மற்றும் புரட்சிகர காவலர் படையின் கப்பல்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.மேலும், ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதற்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், மீண்டும் தீவிரமடைந்துள்ள இந்த மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *