சில பத்திரிகைகள், இதழ்கள், வலைதளங்கள் நம் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கும். அதற்கு அதன் வடிவமைப்பு, கட்டுரைகள், புகைப்படங்கள் என ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம். ஆனால், இவை எல்லாமும் இடம்பெற்று கூடவே நாம் எதிர்பார்க்காத இன்னும் சில அம்சங்களும் இணையப் பெற்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்களைப் பெற்ற இதழ்கள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் நேஷனல் ஜியோகிராஃபிக் (National Geographic) இதழ்.
இந்த இதழைத் தொடர்ந்து படிக்காதவர், ஏன் இதுவரை பார்த்திராத ஒருவருக்குக் கூட பரிச்சியமான புகைப்படம் ஒன்று உண்டு. நேட் ஜியோ இதழின் அடையாளம் என்றுகூட அதைச் சொன்னால் மிகையல்ல என்பார்கள் மூத்த இதழியலாளர்கள்.
உலகறிந்த புகைப்படமும் பின்னணியும்: அது பாகிஸ்தான் அகதிகள் முகாம்களில் 33 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம். அதில் அந்தச் சிறுமி கவலையான முகத்துடன் காட்சியளிப்பார். அவருடைய பச்சைநிறக் கண்கள் வறுமையின் அதுவும் அகதியின் வறுமை நிறத்தைக் காட்டுவதாக இருக்கும். ஓர் ஆவணமாக மாறிப்போன அந்தப் படத்துக்கு சொந்தக்காரி ஷர்பத் குலா. அப்போது அச்சிறுமிக்கு வயது 12. அந்தச் சிறுமியை அமெரிக்காவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்தார். அது 1985-ம் ஆண்டு, நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டைப் படத்தில் வெளிவந்தது. அதன்பின்னர் ‘ஆப்கன் பெண்’ என்று உலகம் முழுவதும் அவர் பிரபலமானார்.
இந்தப் புகைப்படம் உருவாக்கிய தாக்கம் போல் நேட் ஜியோ இதழில் வெளியான அறிவியல் கட்டுரைகள், இயற்கை சார்ந்த ஆழமான கட்டுரைகள் பல்வேறு தெளிவுப் பார்வைகளை வாசகர்களுக்கு கொடுத்து வந்தது. இருப்பினும் சமீப காலமாக இந்த இதழின் அச்சுப் பிரதிகள் சந்தைப் போட்டியில் பொலிவிழந்தன. டிஜிட்டல் தளங்களில் வளர்ச்சியின் நேரடி தாக்கத்துக்கு உள்ளாகியது நேட் ஜியோ இதழ்.
இதனைத் தொடர்ந்து ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது அந்த இதழ். தற்போது கடைசிக் கட்டமாக கடைசியாக பணியில் இருந்த சில ஊழியர்களையும் அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. 2015-ல் இருந்து இது 4-வது லே ஆஃப். கடந்த 9 மாதங்களில் இரண்டாவது லே அஃப்.
இனி நேட் ஜியோ இதழ் சுயாதீன பத்திரிகையாளர்கள் மூலம் கட்டுரைகளைப் பெற்று பத்திரிகையை வெளியிடும். கடைசியாக இருந்த 19 ஸ்டாஃப் ரைட்டர் என்றழைக்கப்படும் ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் அவர்களின் பணி நீக்கம் குறித்து கடந்த ஏப்ரல் மாதமே தெரிவிக்கப்பட்டுவிட்டது என நிறுவனம் கூறியுள்ளது.
கவர் படத்தில் தனிச்சிறப்பான புகைப்படங்கள், அட்டைப்படத்தைச் சுற்றி மஞ்சள் நிறக் கட்டம் என கண்களைக் கவர்ந்து உள்ளங்களைக் கொள்ளைகொண்ட நேட் ஜியோ அடுத்த ஆண்டு முதல் அச்சேறாது என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் முழுவதும் டிஜிட்டல் பிரதியாக வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
பணி நீக்கம் குறித்து ஊழியர்களில் ஒருவரான் க்ரெய்க் வெல்ச் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. வியத்தகு பத்திரிகையாளர்களுடன் பணி செய்து மிக முக்கியமான சர்வதேச நிகழ்வுகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். அது மிகப் பெரிய கவுரவம்” என்று கூறியுள்ளார்.
இன்னொரு பணியாளரான டக்ளஸ் மெயின் நேற்று தனது கடைசிப் பணிநாளில் பகிர்ந்த ட்வீட்டில், “இந்த ஐந்து ஆண்டுகள் அற்புதமானதாக இருந்தது. எனது சகாக்களும் நானும் இங்கே செய்த பணிகள் அனைத்தையும் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்” என்று நெகிழ்ச்சிபொங்க பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் நேட் ஜியோ பத்திரிகையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் ஆல்பர்ட் கூறுகையில், “பணியாட்கள் நீக்கத்தால் பத்திரிகை பிரசுரம் தடைபடாது. தகுதியான சுயாதீன பத்திரிகையாளர்கள் மூலம் கட்டுரைகளைப் பெற்று பிரசுரிப்போம்” என்றார். இருப்பினும் அதன் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கின்றது.
தொடக்கங்களும் முற்றுப்புள்ளிகளும் எப்போதுமே ஏதோ ஒரு தத்துவத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டேதான் செல்கின்றன. அது பெரிய ஆளுமைகள் சார்ந்ததாக இருக்கட்டும் அல்லது பெரும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும்.