பெங்களூருவில் நடைபெற்ற 7-வது உலக திருக்குறள் மாநாட்டில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் மற்றும் கல்வி நிலையங்களில் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 60-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் திருக்குறளை மையமாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், திருக்குறள் தமிழர்களின் பெருமை மட்டுமல்ல, உலக மக்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக திகழும் நூல் என்றும், இன்றைய இளைஞர்கள் தினமும் திருக்குறளை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பள்ளி மாணவர்களிடம் திருக்குறளை கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.மாநாட்டு ஏற்பாட்டாளர் எஸ்.டி.குமார், கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டால் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.மாநாட்டில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் திருக்குறளின் இலக்கிய, அறிவியல் மற்றும் சமூகப் பார்வைகள் குறித்து ஆய்வுரைகளை வழங்கினர். குறிப்பாக, திருக்குறளில் இடம்பெற்றுள்ள முகபாவனைகள் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான ஆய்வுரை கவனம் பெற்றது.

