நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான நவராத்திரி விழா நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி. ஒன்பது நாட்கள் போரிட்டு இறுதியில் மகிஷனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள்தான் விஜயதசமி.
நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா. அசுரனை அழித்த விழா என்பதை விட மனிதர்களுக்கும் இதன்மூலம் பல நன்மைகள் உள்ளது. நம்முள் இருக்கும் சோம்பேறித்தனம் என்னும் மகிஷனை அழிக்கவே அதிகாலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விரதம் இருந்து அம்மனை வழிபடுகிறோம். இதன்மூலம் நம்முடைய சக்தி அதிகரிக்கும். தினசரியும் தொலைக்காட்சிகளில் மூழ்கிவிடும் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் கொஞ்சம் டிவி சீரியலுக்கு விடை கொடுத்துவிட்டு கோவில்களிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலும் வைத்திருக்கும் கொலுவை பார்வையிட்டு பாடல்களை பாடி உற்சாகமடைந்துள்ளனர்.
நவராத்திரி பண்டிகை வட இந்தியாவிலும் கர்நாடக மாநிலம் மைசூருவிலும் மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மைசூரு தசரா போல தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கோவில்களிலும் ஆலயங்களிலும் கொலு வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.

