கெய்லி ஹாட்டில், ‘Godzilla vs. Kong’ மற்றும் ‘Godzilla x Kong: The New Empire’ திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் நடிகை. 18 வயதான அவர் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.காது கேளாத மாற்றுத்திறனாளியான கெய்லி, 2021ஆம் ஆண்டு வெளியான ‘Godzilla vs. Kong’ திரைப்படத்தில் ‘ஜியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து 2024ஆம் ஆண்டு வெளியான படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ஹாலிவுட் நடிகர்களான ரெபெக்கா ஹால், டான் ஸ்டீவன்ஸ் உள்ளிட்டோருடன் கெய்லி இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம் ஃபிரடெரிக் பகுதியில் நடந்த சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.அதிவேகமாக கார் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். கெய்லியின் மரணத்தை அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில், அமெரிக்க சைகை மொழியில் வெளியிட்ட வீடியோ மூலம் உறுதி செய்துள்ளார். அவரது திடீர் மரணம் ஹாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

