1000 ஆண்டுகள் நீடித்திருக்கும் வைர பேட்டரி உருவாக்கிய விஞ்ஞானிகள்.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

அறிவியலாளர்கள் நீண்ட காலத்திற்கு மின் சக்தி வழங்கக்கூடிய பேட்டரியை உருவாக்கியுள்ளனர். இது ஆயிரம் ஆண்டுகள் வரை கருவிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டதாக இருக்குமென கூறுகின்றனர். ரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மற்றும் UK அணுசக்தி ஆணையம் (UKAEA) இணைந்து உருவாக்கிய முதல் கார்பன்-14 வைர பேட்டரி, பல்வேறு சூழல்களில் பயன்படக்கூடிய ஒரு புரட்சிகர ஆற்றல் ஆதாரமாக விளங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது பல எரிபொருள் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது. தொல்லியல் ஆய்வுகளில் பொருள்களின் காலகட்டத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் கார்பன் 14 என்ற தனிமத்தின் கதிரியக்க சிதைவுகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரத்தை உருவாக்குகிறது.ஒரு சோலார் பேனல் ஒளியை மின்சாரமாக மாற்றும் முறையில், கதிரியக்கச் சிதைவிலிருந்து வேகமாக நகரும் எலக்ட்ரான்களை மின்சாரமாக வழங்குகிறது. கார்பன் 14 வைரத்தில் வைக்கப்பட்டுள்ளதால், (diamond battery) அதிலிருந்து வெளியேறும் எலக்ட்ரான்கள் கசியாமல் பாதுகாக்கப்படுகின்றன.கதிரியக்க கதிர்வீச்சை வைரம் உறிஞ்சுவதன் மூலம், பாதுகாப்பான முறையில் குறைந்த அளவிலான மின்சாரம் நீண்ட காலத்திற்கு உருவாக்கப்படுகிறது. கார்பன் 14 -ன் அரை ஆயுள்காலம் 5,700 ஆண்டுகள் என்பதால், 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் இதிலிருந்து மின்சாரம் கிடைக்கும். வைர பேட்டரிகள் நிலையான மற்றும் பாதுகாப்பான மாற்று சக்தியாக இருக்கும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர், மேலும் இதனை பல்வேறு துறைகளில், குறிப்பாக மருத்துவத்துறையில், பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த முடியும். உதாரணமாக, இதயத்தின் துடிப்பு சீராக இருக்க உதவும் Pacemaker மற்றும் செவித்திறன் கருவிகள் போன்ற கருவிகளில் பேட்டரி மாற்றுவது பெரும்பாலும் சிரமமாக இருக்கும். ஆனால், இந்த வைர பேட்டரி நீண்ட காலம் செயல்படுவதால், அந்த சிக்கல்களை தீர்க்கிறது. விண்வெளி திட்டங்களில், செயற்கைக்கோள்கள் மற்றும் பூமியில் அடிக்கடி அணுக முடியாத இடங்களில் இந்த பேட்டரியின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *