தமிழ்நாட்டில் மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரிக்கவும், அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய், மாணவர்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைக்கிறார்.இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இதன் மூலம் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 35 லட்சமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த திட்ட விரிவாக்கத்தின் மூலம் மொத்தம் 44,984 அரசுப் பள்ளிகள் பயன்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காலை நேரத்திலேயே சத்தான உணவு வழங்குவதன் மூலம், அவர்கள் கவனத்துடன் கல்வி கற்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கவும் இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

