நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதலமைச்சர் விஜய்யின் மக்கள் ஆதரவை மீண்டும் நிரூபித்துள்ளது. ஆனாலும், ஆளும் கட்சியை எதிர்த்து வாக்களித்த எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் 63 சதவீதத்தை எட்டி ஆளும் கட்சிக்குப் பெறும் எச்சரிக்கையாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் விஜய்யின் நிர்வாக நடைமுறைகள் மற்றும் அறிவிப்புகளுக்கு மக்கள் அளித்த நற்சான்றிதழாகவே இந்த இடைத்தேர்தல் வெற்றி பார்க்கப்படுகிறது.
“ஆட்சி அமைத்தது தற்செயல் அல்ல, மக்களுக்கு எங்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை இருக்கிறது” என்பதை இந்த இரண்டு தொகுதி வெற்றிகள் மூலம் தவெக தரப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர்கள் இருவரும் அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குத் தாவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் களம் சூடுபிடித்த வேளையில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் ஆளும்கட்சி மீது எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தன. அதற்கு ஆதாரமாக காணொளிகளும் வெளியாகின. தவெக ஆட்சியை அமைத்து 100 நாட்களைக் கடந்த நிலையிலும், பல முக்கிய அரசுக் கோப்புகளும் திட்டங்களும் இன்னும் செயல்படுத்தப்படாமல் மந்த நிலையிலேயே நீடிக்கின்றன. புதிய அரசின் திட்டங்கள் முழுமையான வேகத்தை எட்டவில்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
