நடிகை கவுதமி, அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த அவர், கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு, அவருக்கு மாநில நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான தகவல்களை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “நடிகை கவுதமி அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தடா து. பெரியசாமி எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராகவும், சென்னையை சேர்ந்த ஃபாத்திமா அலி, கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

