இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான யுத்தம் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிணைக் கைதிகளை கொன்று விடுவதாக ஹமாஸ் விடுத்த எச்சரிக்கையை மீறி, இஸ்ரேல் அதிரடி தாக்குதலை முன்னெடுத்தது. இதில், ஹமாஸை சேர்ந்த நிதி அமைச்சர் உட்பட 2 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக அஷ்கெலோன் நகர் மீது ஹமாஸ் அமைப்பினர் சரமாரியாக ஏவுகணை தாக்குதலை தொடுத்தனர். இதனை IRON DOME தொழில்நுட்பம் மூலம், வானிலேயே இஸ்ரேல் அழித்த காணொளி வெளியாகி உள்ளது.
காஸா அருகே உள்ள இஸ்ரேலுக்கு உட்பட்ட கஃபார் அசா என்ற கிராமத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் சுமார் 750 பேர் வசித்து வந்த நிலையில், தற்போது பிணக்குவியல்கள் மட்டுமே காணப்படுவதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதல் போர் அல்ல, இனப்படுகொலை என்று இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், சுமார் 3,60,000 பேர் போர் களத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காஸா தரப்பிலும் சுமார் 1,000பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காஸாவில் இருந்து 2,60,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதம் மற்றும் வெடி பொருட்கள் அடங்கிய விமானம் இஸ்ரேல் சென்றடைந்தது. இதுதொடர்பாக பேசிய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் மற்றும் யூதர்களை அழிப்பதே ஹமாஸின் இலக்கு என்று குற்றம்சாட்டினார். அத்துடன், அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தும் ஹமாஸ் அமைப்பிற்கு, தக்க பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு என்றும் கூறினார். மேலும், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கன், இஸ்ரேல் செல்ல உள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களுக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
போரின் தொடக்கமாக காஸா பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. குறிப்பாக எகிப்தில் இருந்து சாலை வழியாக வாகனங்கள் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே, உணவு, குடிநீர், மருத்துவப் பொருட்கள் கப்பல் வழியாக காஸா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், காசா துறைமுகத்தின் மீதும் இஸ்ரேல் தற்போது தாக்குதல் தொடுத்துள்ளது. இதனால், பாலஸ்தீன மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் முற்றிலும் தனித்து விடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவ உதவிகளும் கிடைக்காமல், உயிருக்கு ஆபத்தான சூழலில் பலர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.