தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி ஆரம்பமாகியுள்ளது. தற்போது, உள் தமிழகத்தில் இந்த பருவமழை தீவிரமாக நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து, நாளை ‘டானா’ என்ற பெயரில் புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இது தீவிர புயல் சின்னமாக மாறும் என எதிர்பார்க்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 25-ந்தேதி அதிகாலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
