சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் Joseph Vijay மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பேத்கர் கலைக் கல்லூரியில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு, திட்டமிட்டபடி செல்லாமல், பிரசார வாகனத்தில் ஊர்வலமாக கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலைக்கு சென்றதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பேத்கர் கல்லூரி சாலை முதல் எம்.கே.பி நகர் வரை வாகனங்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.மேலும், கொடுங்கையூரில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மட்டுமே அனுமதி இருந்த போதிலும், விஜய் முன்கூட்டியே பிரசாரம் தொடங்கினார். பின்னர் கொளத்தூரிலும் அனுமதி நேரத்திற்கு முன்பே வந்து குறுகிய நேரம் பேசி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதுடன், விதிமுறைகளை மீறி அதிக அளவில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

