“துளி” இயக்கம் தொடக்கம்! மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

அரசியல் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் தமிழ்நாடு

தமிழகத்தில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், ‘துளி’ என்ற பெயரில் புதிய விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் விஜய் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுக்கான ‘துளி’ இலச்சினையை அவர் அறிமுகப்படுத்தினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு மாதிரி வீட்டையும் பார்வையிட்டார். தொடர்ந்து, மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு காணொளியையும் பார்வையிட்டார்.இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல் சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதாகும். இதற்காக, வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிகக் கட்டடங்களில் ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஆய்வு செய்து, பழுதடைந்தவற்றைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களில் புதிய மழைநீர் சேகரிப்பு அமைப்புகளையும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளன. மழைநீரைச் சேகரிப்பதுடன், அதை முறையாகப் பயன்படுத்துவதற்கும், நிலத்தடிக்குள் நீர் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *