இளம் இந்திய விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கம் தலைமையிலான ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்டின் குழுமம் இணைந்து, இந்திய தனியார் விண்வெளித்துறையில் புதிய சாதனை படைத்துள்ளன. இவர்களின் ‘ரூமி ட்வின் மிஷன் 2026’ திட்டத்தின் கீழ், 10 அக்டோபர் 2026 அன்று சென்னை மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. “அனைவருக்கும் விண்வெளி அறிவியல்” என்ற நோக்கத்தின் கீழ் உருவான இத்திட்டத்தில், ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்த அதிநவீன ராக்கெட்டுகளை உருவாக்கியுள்ளனர்.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், செலவைக் குறைக்கும் வகையில் ஒரே நேரத்தில் இரண்டு மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டுகளை (RRR-1 & RRR-2) ஏவி, விண்ணில் இன்ஜினை நிறுத்தி மீண்டும் இயக்கும் ‘ரீ-ஸ்டார்ட்’ தொழில்நுட்பத்தை சோதிப்பதாகும். ஏவுதலின் போது ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறால் ஒரு ராக்கெட் தரைதளத்திலேயே நின்ற போதிலும், மற்றொரு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, நிர்ணயிக்கப்பட்ட 6 கி.மீ எல்லையைத் தாண்டி 8 கி.மீ உயரம் வரை பறந்து சாதனை படைத்தது. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டப் பல அறிஞர்கள் மாணவர்களின் இந்த அரிய முயற்சியைப் பாராட்டியுள்ளனர்.

