புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அம்மாநில முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம், இலவச மடிக்கனிணி, சிறுதானிய சிற்றுண்டி, முதியோர் ஓய்வூதியம் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.அதில் முக்கியமானதாக மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதனிடையே புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் ரூ.300 வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். இந்தநிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அசராணை வெளியிட்டுள்ளது.புதுச்சேரி மாநில அரசு சார்பில் சிலிண்டர் மானியமாக மாதம்தோறும் ரூ.300 வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டை தாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 வழங்கப்பட உள்ளது. வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.150 மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

