கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடியோ கால் மூலம் தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அன்றிரவே முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஆனால், தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடியோ காலில் விஜய் ஆறுதல் தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, விரைவில் நேரில் வந்து சந்திப்பேன் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதியாக நிற்பேன் என்றும் விஜய் உறுதியளித்ததாகத் தெரிகிறது.
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 20 பேரின் குடும்பத்திடம் விஜய் பேசியதாகக் கூறப்படுகிறது. அத்துடன், தவெக நிர்வாகிகள் மூன்று பேர் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று ஆறுதல் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
