சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சமீபத்தில் ரோபோக்கள் விற்பனைக்கு என்றே பிரத்யேக வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த ‘கைவா டெக்னாலஜி’ நிறுவனம் கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் திறன் உடைய ரோபோவை உருவாக்கும் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிபெங் தலைமை தாங்குகிறார். இந்த தொழில்நுட்பம் வெற்றியடையுமானால், குழந்தை இல்லாத தம்பதியர்கள் அல்லது உயிரியல் கர்ப்பத்தை விரும்பாதவர்கள் இதன் மூலம் உதவி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து விஞ்ஞானி ஜாங் கிபெங் கூறுகையில், “இந்த தொழில்நுட்ப ஆய்வு தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளது. ரோபோவின் வயிற்றில் செயற்கை கருப்பையை பொருத்தி, செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்யப்படும். கரு அதில் வளரும். இந்த ரோபோவின் மாதிரி அடுத்த ஆண்டு அறிமுகமாகும்,” என்றார்.இந்த தொழில்நுட்பம், 2017ல் செயற்கை கருப்பை திரவத்துடன் கூடிய, ‘பயோபேக்’ மூலம் ஆடுகள் கருவிலிருந்து வளர்க்கப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த தொழில்நுட்பம் வெற்றியடையுமானால், தாயுடன், கருவில் வளர்ந்த குழந்தைக்கு எவ்வாறு பிணைப்பு உருவாகும், அதற்கான மன ரீதியான தாக்கங்கள் என்ன என்ற கேள்விகள் பல தரப்பினர்களையிடையே முன் வைக்கப்படுகின்றன.

