அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கத்தாரில் உள்ள எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ரஸ் லஃப்பான் நகரில் உள்ள மெசையித் மின் நிலையம் மற்றும் எரிசக்தி தொடர்பான பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், ஓமன் அருகே வெடி பொருள் நிரப்பப்பட்ட படகு ஒன்று எண்ணெய் கப்பலுடன் மோதச் செய்யப்பட்டதில் வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஓமன் கடலோரம் வழியாக செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரானின் தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் சைரன் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் நதான்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை தளபதி அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

