இந்தியாவில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு இங்கு தொழில் செய்யும் எந்த ஒரு நிறுவனமும் கட்டுப்பட்டே தீரவேண்டுமென்று ட்விட்டர் நிறுவனத்திடம் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர் அஜய் பிரகாஷ் சாஹ்னே புதன்கிழமை கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரின் வேண்டுகோளின் பேரில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சக செயலாளர், ட்விட்டர் நிறுவனத்தின் உலகலாவிய பொதுக் கொள்கை பிரிவு துணைத் தலைவர் மோனிக் மெச்சே, துணை பொது ஆலோசகர் மற்றும் சட்டப்பிரிவு துணைத் தலைவர் ஜிம் பேக்கர் ஆகியோருடன் காணொளிக்காட்சி வாயிலாகப் பேசினார்.
“விவசாயிகள் இனப்படுகொலை” என்ற பகிர அணுமதிக்கப்பட்ட ஹேஷ்டேக் மற்றும் காலிஸ்தான் அனுதாபிகள் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவுடன் கூடிய ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு இந்திய அரசு ட்விட்டருக்கு உத்தரவிட்ட நிலையில் இதில் பகிரப்பட்ட விவரங்களை, இந்திய அரசு புதன் கிழமை இரவு வெளியிடப்பட்டிருக்கிறது. அது குறித்து மத்திய அரசு உயர் அதிகாரி விவரித்தார்.
இத்தகைய பொறுப்பற்ற உள்ளடக்கம் பிரச்சனையைத் தூண்டும் மற்றும் ஆதாரமற்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவது இந்திய அரசியல் அமைப்பின் 19ஆவது பிரிவின் கீழ் தவறு என்பதும் ட்விட்டர் நிர்வாகிகளிடம் நினைவூட்டப்பட்டது.
அத்தகைய செயல்பாடு ஊடக சுதந்திரமோ கருத்துச் சுதந்திரமோ ஆகாது என்றும் அரசுத் துறை செயலாளர் குறிப்பிட்டார். இவ்வளவு நடந்த பிறகும் சர்ச்சைக்குரிய அந்த ஹேஷ்டேக்கை தொடர ட்விட்டர் அனுமதித்தது மிகவும் துரதிஷ்டவசமானது என்ற கவலையும் ட்விட்டர் நிறுவனத்திடம் பகிரப்பட்டது.