தென் கொரியாவில் செயல்பட்டு வரும் கொரியா தமிழ்ச் சங்கம், இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “இந்தியா தின” விழாவில் பங்கேற்று தமிழர் அடையாளங்களையும் தமிழர் பண்பாட்டையும் சிறப்பாக வெளிப்படுத்தியது. 16.05.2026 அன்று சியோலில் உள்ள ஹான் ஆற்றங்கரையிலுள்ள யோயிடோ பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியாவின் பல மாநிலங்களின் கலை, பாரம்பரியம், உணவு மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தமிழ்நாட்டின் சார்பில் கொரியா தமிழ்ச் சங்கம் பங்கேற்று திருவள்ளுவர் சிலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர் அடையாளங்களை காட்சிப்படுத்தியது. மேலும் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வில் கொரியா தமிழ்ச் சங்கத்தின் எதிர்கால ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செல்வி ஸ்ரீ தரங்கினி கொரிய மொழியில் எழுதிய கவிதைகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. காட்சிப் பொருட்களை திருமிகு சுமித்ரா விக்னேஷ் ராம் சிறப்பாக வடிவமைத்திருந்தார்.
கலைநிகழ்ச்சிகளில் செல்வி தெல்வி டி.கே. நேஹாஸ்ரீ, செல்வி அச்சிரா, மகிழினி சதீஷ்குமார், செல்வி ஷெர்லின் மரியா, செல்வி சோரா பாலச்சந்திரன், முனைவர் சரஸ்வதி, திருமதி அக்ஷயா, முனைவர் அகிலா கதிரேசன், திரு விபின் முத்துசாமி, செல்வன் யேரின் பிரியன் மற்றும் திரு ருகேஷ் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர். பரதநாட்டிய நிகழ்ச்சியை செல்வி வெங்கடாமி அருமையாக அரங்கேற்றினார். இக்கலைநிகழ்ச்சிகளை முனைவர் சரஸ்வதி அழகுற ஒருங்கிணைத்தார். மேலும் கொரியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் அரவிந்த்ராஜா செல்வராஜ், துணைத்தலைவர் திருமதி விஜயலட்சுமி பத்மநாபன் மற்றும் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு விபின் முத்துசாமி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். துரைத்தூதர் சுரேஷ்குமார் மற்றும் உதவி துரைத்தூதர் அனிந்திதா ஆகியோர் கலைஞர்களின் திறமையை பாராட்டி வாழ்த்தினர். இந்நிகழ்வு “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற இந்தியாவின் பண்பாட்டு சிறப்பை எடுத்துக்காட்டியதுடன், தமிழர் மரபையும் பண்பாட்டையும் சர்வதேச அரங்கில் பெருமையுடன் வெளிப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.











