திருப்பதி லட்டு குறித்து பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை எதிரொலியாக, ஆந்திர மாநில டிஜிபிக்கு தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூப் சேனலான பரிதாபங்கள்’ அதில் வெளியான அந்த வீடியோ, திருப்பதி லட்டு விவகாரத்தை கேலியாக விமர்சித்தது. கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோரின் ‘லட்டு பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான வீடியோக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டு, சேனல் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இருப்பினும், அந்த வீடியோ நீக்கப்பட்டாலும், சேனலை பின்தொடர்பவர்கள் அதை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.தமிழக பாஜக சார்பில் அளித்த அந்த மனுவில், ‘கோபி, சுதாகர் இயக்கும் ‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலில் ‘லட்டு பாவங்கள்’ என்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஹிந்து மதத்தின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த அவதூறான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பாக, ‘மாட்டு இறைச்சி’ மற்றும் ‘மீன் எண்ணையுடன்’ கூடிய திருப்பதி லட்டு சுவையாக இருப்பதாக கூறுவது, இந்த புனித பிரசாதத்தின் மத முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் வீடியோ இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை அவதூறான சித்தரிக்கும் கருத்துகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. எனவே, மத உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ள இந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

