நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மறு ஆய்வு செய்யக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்டதாரி இளைஞர்கள் நுழைந்து முழக்கம் எழுப்பியவாறு வண்ண புகைக் கருவிகளை வீசினர். நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தனர். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அடுத்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் அனுப்பினார்.
எம்.பி.க்களின் உதவியாளர்கள், செயலாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் எம்.பி.க்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், பத்திரிகையாளர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் மாற்று வழியில் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

